செவ்வாய், டிசம்பர் 31, 2024
மூடிய மண்டபங்களுக்குள் போட்டிகள்
-நிவேதிகன்-
கலை மனித உணர்வுகளின் உற்பத்தி.மனிதர்கள் கூடுவதற்கும் கதையாடுவதற்கும் களங்கள் திறக்கப்பட்டபோது கலைகள் பிறப்புக்கொண்டன.
கலைகள் மனிதர்களது இயங்கியலுக்கு களம் ஏற்படுத்திக்கொடுத்ததுடன்.உளவிடுதலைக்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தின.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் கலைச்செயற்பாடுகள் போட்டிகளும் பொறாமைகளும் மிளிர்ந்த வகையில் ஒவ்வொரு கலைச்செயற்பாட்டாளர்களும் தாம் மேற்கொள்வது மட்டுமே தரமான கலைச்செயற்பாடுகள் எனும் வகையில் இயங்குகின்றனர்.
கலைகளில் ஈடுபடுகின்றபோது தலைமைத்துவம்,விட்டுக்கொடுப்பு,கற்பனையாற்றல் போன்ற பல்வேறு பண்புகள் வளர்த்தெடுக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.ஆனால் போட்டிகளிற்காக கலைச்செயற்பாடுகள் மேற்கொள்கின்றபோது மாணவர்களிடையே தாம் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் மட்டும் சிறப்பானவை ஏனையவர்களது செயற்பாடுகள் மோசமானவை என்கின்ற சிந்தனை கலைச்செயற்பாடுகளை பயிற்றுவிக்கின்றவர்கள் மூலம் கலைச்செயற்பாட்டாளர்களாகிய மாணவர்களது மனங்களில் விதைக்கப்படுகின்றது.
தாமே போட்டியில் வெற்றிபெறுவோம் தம்மை வெல்ல முடியாது எனும் தற்பெருமை மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவை அவர்களிடையே இயல்பாக உள்ள கற்பனை ஆற்றலினையும்,கூட்டுனர்வு மனப்பாங்கினையும் இல்லாதொழித்து குறுகிய மனப்பாங்குடையமனிதர்களாக வளர்த்தெடுக்கப்படுவதற்கு துனைசெய்கின்றன. ஆனால் அவர்களை பொறுத்தவரையில் இதுவே விசாலமான மனமாக கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
கலைத்திறன் போட்டிகள் ஏன் நடத்தப்படுகின்றது எனும் மனப்பாங்கு தகர்க்கப்பட்ட நிலையில் வெறுமனே போட்டிகள் நடத்தப்பட்டால் போதும் என்கின்ற நிலையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
கலைச்செயற்பாடுகளை தரநிர்னயம் செய்கின்றவர்களாக பார்வையாளர்கள் இருக்கின்றவேளையில் பார்வையாளர்கள் இன்றியே போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகளை மதிப்ப்Pடு செய்வதற்காக அழைக்கப்படுகின்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றார்களோ அவர்களது அனுசரனையிலே அழைக்கப்படுவதும் அழைக்கப்பட்டவர்கள் தமது விசுவாசத்திற்கு ஏற்றவகையில் செயற்படுவதையும் போட்டிகளில் பங்குபற்றி தோல்வியடையப்பட்டவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர்.
இங்கு வெற்றி பெற்றவன் திறன் படைத்தவனாகவும் வெற்றிபெறுவதில் இருந்து தவறிப்போனவன் திறன் அற்றவனாகவும் சித்தரிக்கப்படுகின்ற மனவியலை உணர்ந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
இங்கு கலைச்செயற்பாடுகளுக்காக போட்டிகளில் பங்குபற்றுகின்றவர்கள் மாணவர்கள் என்கின்ற மனநிலைகூட அற்றவர்களாக போட்டிகளை நடத்துகின்றவர்களும் ஏனையவர்களும் நடந்துகொள்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
வசதிபடைத்தவர்கள் சாதனையாளர்களாகவும்,வசதியற்றவர்கள் சோதனையாளர்களாகவும்,வேதனையை அநுபவிப்பவர்களாகவும் மாற்றமுறுகின்றனர்.
கலைச்செயற்பாடுகளது பிரதான நோக்கம் தள மாற்றம் ஆகும். தளமாற்றம் எனும் போது ஏற்கனவே இருக்கின்ற நிலையில் இருந்து கலைச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது பெற்றுக்கொள்கின்ற அநுபவ திரட்சியின் அடிப்படையில் நல்ல பண்புகளை உள்வாங்கிக்கொண்டு புதிய சிந்தனையையும்,கருத்துத்தளமாற்றம் உடையவர்களாகவும் மாற்றமுறுகின்ற பண்பினை தளமாற்றம் என மாணிடவியலாளர்கள் கருத்துப்பகிர்கின்றனர்.
ஆனால் சிலரது பயன்தரு செயற்பாடுகளிற்காக எதிர்மறையான மாற்றங்கள் கலைச்;செயற்பாட்டாளர்கள் மனங்களில் ஏற்படுகின்ற வகையில் போட்டிகளிற்கான மனப்பாங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுவர்களிற்கான போட்டிகள் இடம்பெறுகின்றபோது அவர்களது உளரன் மேம்பாட்டினை அடிப்படையாகக்கொண்டவகையில் போட்டிகள் என்றல்லாது குதூகலமான மனப்பாங்குடையதாக போட்டிகள் வடிவமைக்கப்படவேண்டும் என குறிப்பிடப்படுகின்றபோதும் பெரும்பாலான போட்டிகள்அவர்களிடையே போட்டி மனப்பாங்கினையும் பொறமை மனப்பாங்கினையும் வளர்த்தெடுக்கின்ற வகையில் போட்டிகளது கள நிலவரங்கள் அமைந்துவிடுகின்றன.
கலைச்செயற்பாடுகள் மூலம் வெற்றிதோல்விகளை சமமாக மதித்து நடக்கப்பழகவேண்டும்.போட்டிகளின் மூலம் நற்பண்புகளை வளர்த்தெடுக்கவேண்டும்,சமூக நலச்சிந்தனையுடையவர்களாக மாற்றமடையவேண்டும். என பல விடயங்களை குறிப்பிடுகின்றனர்.
மாறாக நடத்தப்படுகின்ற நோக்கங்களிற்கு மாற்றீடாக போட்டிகள் முடிவடைந்து போகின்றமை பற்றி நுண்னுனர்வுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
போட்டிகளில் பங்குபற்றுகின்ற போது எந்தவகை போட்டியாக இருந்தாலும், போட்டியாளர்களிடம் உள்ள சாதகமான விடயங்கள்,அல்லது அவர்களிடையே உள்ள நல்ல விடயங்கள் சுட்டிக்காட்டப்பாடாமலேயே மழுங்கடிக்கப்பட்ட மனநிலையில் மனங்கள் மரத்துப்போன சமூகங்களை உருவாக்குவதாக போட்டிகளின் செயற்பாடுகள் முடிவடைந்து போகின்றமை துர்பாக்கியமானதாகும்.
ஆனால் இவ்விடயங்கள் எவற்றினையும் உணர்ந்துகொள்பவர்களாக போட்டி நடத்துனர்கள் காணப்படுவதில்லை என்பது உய்த்துனர்ந்துகொள்ள வேண்டும்.
அவர்களது நோக்கம் போட்டியை நடத்தி முடிந்தால் போதும் என்கின்ற மனப்பக்குவமே காணப்படுகின்றது.போட்டியில் பங்குபற்றுகின்ற கலைச்செயற்பாட்டாளர்களை ஏனைய போட்டிகளினை கண்டு கொள்ளக்கூடியவகையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தப்படுகின்றபோது தமது தரத்தினையும் மற்றவர்களது தரத்தினையும்,தமது பலத்தினையும் பலவீனங்களையும், மற்றவர்களது பலத்தினையும், பலவீனங்களையும், கற்றுனர்ந்துகொள்ளும்போது தம்மை தாமே சுயவிசாரனை செய்து கொள்வதன் மூலம் ஒரளவுக்கேனும் கலை சார்ந்த புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
இத்தகைய களவெளிகள் ஏற்படுத்தப்படுகின்றபோது பங்குபற்றுபவர்களுக்கிடையே பரஸ்பர புரிந்துனர்வு ஏற்படுத்தப்படுவதற்கும் கலைசார்ந்த புரிந்துனர்வுச்செயற்பாடு உருவாகுவதற்கும் களம் ஏற்படுத்தப்படும்.
இல்லையேல் குத்துவெட்டு மனப்பாங்கும், வன்முறைசார்ந்த உணர்வெழுச்சிகளும், ஏற்படுத்தப்பட்டு மனங்களில் வக்கிர உணர்வுகளும், எதிர் மனப்பாங்கும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகும்.
மேலும் போட்டிகள் மாணவர்களுக்கானவையே தவிர பயிற்றுனர்களுக்குரியதல்ல எனும் மனப்பக்குவத்தை நடத்துனர் குழுமம் புரிந்து கொள்ள வேண்டும்.
கலைத்திறன்போட்டிகள் மீளுருவாக்க முடியாதவை ஆகும். குறித்த கனத்தில் செயற்பாட்டாளர்களது மனநிலைக்கு ஏற்ப முகிழ்தெழுபவை. .பங்குபற்றுகின்றவர்கள் எல்லோரும் சிறப்பாக அதி உச்சமான வெளிப்பாட்டினை வெளிப்படுத்துகின்ற போதும் குறித்த ஒருவரே வெற்றிபெறமுடியும் என்பது
போட்டிகளின் சுற்றுநிருபங்களிற்கு ஏற்ப,நடைமுறைச்செயற்பாடாக காணப்படுகின்றது. ஆனால் வெற்றியடைந்தவர்களை கொண்டாடுகின்ற நடத்துனர்கள் தோல்வியடைந்தவர்களது மனநிலையில் இருந்து அவர்களை தரிசனம் கொள்வதில்லை.அத்தகைய சிந்தனைப்போக்கே பல்வேறு தோல்விகளிற்கு களங்களை திறந்து விடுகின்றன.
மூடிய மண்டபங்களுக்குள் மட்டும் போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டும் எனும் மனப்பாங்கில் போட்டிகளை நடாத்தி கலைச்செயற்பாட்டாளர்களது மனங்களையும் மூடிக்கொள்ளப்போகின்றோமா? இல்லையேல் திறந்த மனப்பாங்குடன் நடந்துகொண்டு விரிசிந்தனையை உருவாக்கிக்கொள்ளப்போகின்றோமா என்பது ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொள்ள வேண்டிய விடயமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக