ஞாயிறு, ஜனவரி 26, 2025
குழந்தை ம.சண்முகலிங்கத்திற்கு தாஸிஸியஸ் அவர்களின் அஞ்சலி
(ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்)
நாடக அரங்கக் கல்லூரி நினைவுகள் அலை அலையாக வர, புரண்டு புரண்டு படுத்தேன். வெம்மூச்சு தவிர, வேறெதுவும் சுரக்கவில்லை.
கொழும்பில் ஒரு தமிழ் நாடகனாக புறக்கணிக்கப்பட்டிருந்த என்னை - யாழ்ப்பாணம் வரவழைத்து,
நாடக அரங்கக் கல்லூரியில் தொண்டாற்ற எனக்கு அந்தப் பெரியவன் வாய்ப்புத் தந்ததால், எத்தனை பென்னம் பெரிய யாழ்ப்பாண நாடக ஆளுமைகளுடன் கூடிப் பழகி உங்கள் அனைவரிடம் இருந்தும் வளம் திரட்டி, ஐரோப்பா வந்த பின் , ஒரு இலங்கை நாடகனாக என்னை நிறுவ முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நாடக முனி குழந்தை சண்முகலிங்கம் என்ற அந்தப் பெரியனுக்கு, நன்றி கூற, இந்தத் தருணத்தில் அங்கு போக முடியவில்லையே என்ற தவிப்பு என்னை இன்னமும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.
அவனிடம் இருந்து நான் பெற்றவை வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவு பிரமாண்டம் பெற்றவை.
ஒரு துரும்பாக ஒதுக்கப்பட்டுக் கிடந்தவனை, ஒரு நாடகத் தூணாக நிமிர்த்தி நிறுத்தியவன் குழந்தை மாஸ்ரர் என்ற அந்த நாடகமுனி.
என்னுடைய ஒப்பாரியை ஒ வென்று குரலெடுத்து வெள்ளப் பெருக்காக்க முடியாமல் எனது லண்டன் குடிலில் இருந்து வெதும்பி விசும்பிக் கொண்டிருக்கிறேன்.
காலையில் எழுந்ததும் கீழே வந்து, சண்ணையும் என்னையும் நாடக ஆத்மாவில் புரிந்து கொண்ட உமது முன்னிலையில் கொட்டித் தீர்க்கிறேன்.
எனது இன்றைய மனத் தவிப்பைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக மண்ணிலும் புலத்திலும் இருக்கும் நாடகர்களிடம் எனது மனத் துயரத் தவிப்பை, அன்ரன், நீரே தெரிவித்துவிடும்
ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக