என்னைப் பற்றி

சனி, மே 31, 2014

எஸ்.ரி.அருள்குமரன்

வாசிப்பின் அவசியத்தினை உணர்த்தும் உலக புத்தக தினம்

நாம் பல்வேறு நோக்கங்களுக்காக  பல்வேறு தினங்களை கொண்டாடி வருகின்ற சூழ்நிலையில் மனித குல வளர்ச்சியின் அறிவுத்தேடலினை விருத்தி செய்கின்ற நூல்களின் சிறப்பினை உணர்ந்து அதனை பயன்படுத்தி அறிவினை வளர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்விணை ஊட்டுகின்ற வகையில் உலக புத்தக தினத்தினை அறிவுலகவாதிககள்,  படைப்பாளிககள் அனைவரும் உலக புத்தக தினமாக கொண்டாடி வருகின்றனர.;

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குவதினால் சித்திரை 23ஆம் திகதியினை  ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் வேண்டுகோளின் படி
 1995ம் ஆண்டு முதல் உலக புத்தக தின நிகழ்வானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

  உலக புத்தக தின நிகழ்வானது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற சிறப்பு நிகழ்வாக உணரப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றதிற்கு காரனமாக உலகளாவிய ரீதியில்  பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறமையும் காரனமாக அமையலாம்.
 இங்கிலாந்தினை சேர்ந்த  தலை சிறந்த இலக்கியவாதியும் நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும் புத்தக தினம் இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷட காரணமாக அமைகிறது.

உலகமறிந்த நாடகமேதை நாடக இலக்கியத்தை கவித்துவமாக உயிரூட்டம் செய்த நாடகமேதை ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு சித்திரை 23 ஆம் நாள் பிறந்து 1616ஆம் ஆண்டு சித்திரை 23 ஆம்  திகதி   இறந்தார்.

  புனைவு இலக்கியத்தில் கொடிக்கட்டிப் பறந்த உலக இலக்கியவாதிகளுக்கு ஆதர்ஷமாகவும் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகின்ற 'டான் குயிக்சாட்' நாவலைப் படைத்த செர்வாண்டைஸ்  என்பவர் 1616 ஆம் ஆண்டு சித்திரை மாதம்  23ஆம் நாள் காலமானார்.

ஆங்கிலக்கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் 1770ஆம் ஆண்டு சித்திரை 23 இல் உயிர் நீத்தார்.
1915 சித்திரை 23ல் கவிஞர் ரூபர்ட் ப்ரூக் காலமானார். 1957 சித்திரை 23ல்  ராய்ஸ்டன் காம்ப்பெல் மறைந்தார்.
1992 ஏப்ரல் 23 இல் உலகப்புகழ்பெற்ற சினிமா இயக்குநர் சத்யஜித்ரே இவ் உலகைவிட்டு மறைந்தார்.

 இவ்வாறு படைப்புலகத்தோடு நெருக்கமாகிவிட்ட சித்திரை 23ஆம் நாளினை உலகப்புத்தக நாளாகப் கடைப்பிடிப்பது என்று 1995 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய இந் நாளை உலகப் புத்தகநாளாக அறிவிக்க வேண்டியதன் அவசியம்  என்ன  என்பதினை நாம் நோக்குதல் வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமநிலை ஏற்பட அறிவுத்தகவல்களைப் பரவலாக்குவதன் ஊடாக உலக சமநிலை அடையவேண்டியதன் அவசியம் அனைவராலும் உணரப்பட்டமையாகும்.
 அறிவுத்தள சமநிலையின் நோக்கின் காரணமாக 1972ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின் புத்தக ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
 இதற்கு முன்னோடியாக  1971  அக்டோபர் 22ஆம் திகதி பிரசெல்ஸ் நகரில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், நூலகர்கள்  ஆவணத் தொகுப்பாளர்கள்  ,பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் அறிவியக்கத் தகவல் பரப்பும் நோக்கில் 10 கட்டளைகள் உருவாக்கப்பட்டன.
அனைத்து நாடுகள் மட்டத்திலான வாசிப்பு இயக்கத்துக்கான தொடங்குதலாக இந்தக் கட்டளைகள் அமைந்தது. விளங்கியது.
இம் மாநாட்டில் தீர்மாணிக்கப்பட்ட 10 கட்டளைகளாக பின்வருவன விளங்குகின்றன. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, புத்தகங்களின் இருத்தல் அவசியம், படைப்பாளியை உருவாக்கும் சமூகச்சூழல்உருவாக்குதல், பதிப்புத்தொழில் வளர்ச்சி, நூலகங்களின் வசதிகள், நூலகங்கள் நாட்டின் கருவூலம், பதிப்பாளர் வாசகர் இணைப்பு, புத்தகங்களைப்பராமரித்தல்பாதுகாத்தல்மற்றும் ஆவணப்படுத்துதல், அனைத்து நாடுகள் மொழிகளின் புத்தகங்களின் பரிமாற்றம், வாசிப்பு மூலம் உலக உறவுஎன்பன இவ் 10 கட்டளைகளுக்குள்ளும் அடங்குகின்றன.

இந்த 10 கட்டளைகளின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் அறிஞர்களினால் தொடர்ந்த விவாதத்தின் விளைவாக 1996 ஏப்ரல் 23 இல் உலகப்புத்தக நாள் அனைத்து நாடுகளிலும் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
உலகப்புத்தக நாள் அறிவிக்கப்பட்டதினை  பயன்படுத்தி   மேலைய நாடுகள் அதனை அறிவுத்துறை வளர்ச்சிக்கான சாதனமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில்  உலக புத்தக நாளை அமெரிக்கா , இங்கிலாந்து ,பிரான்சு போண்ற ஐரோப்பிய நாடுகளின்  பதிப்பகங்கள் பயன்படுத்தத் தொடங்கின.
அறிவுலகப் பண்பாடு மேலோங்கும் வகையில் உலக புத்தக தினத்தையொட்டிய தமது வாழ்த்துக்களினை  தம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். இதனுடாக அறிவுத்துறை வளர்ச்சிக்கான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வெற்றிகளினையும் கண்டார்கள்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குவதினால் சித்திரை 23ஆம் திகதியினை யுனெஸ்கோவின் வேண்டுகோளின்படி உலக புத்தக தினமாககொண்டாடப்பட்டு வருகின்றது..

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை  அனைத்து மக்கள் வாழ் விடங்களிலும் நூலக உரிமை  உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல்  தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல்  புத்தகங்களுக்கும்  வாசகர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.


 ஆனால் இன்றைய பொழுதுகளில் அனைவரினாலும் குறை கூறப்படுகின்ற விடயமாக வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது பெரும்பாலும் யாருமே வாசிப்பதில்லலை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான மாற்று சிந்தனையுடன் இயங்குகின்றவர்கள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.
வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாகும்  இவ் இயக்கத்தினால் தான் ஆரோக்கிய மான சமுதாயத்தினை கட்டியெழுப்பமுடியும் எனும் யதார்த்தத்தினை உனர்ந்து கொண்டு   செயற்ப்படவேண்டும்.
வாசிப்பற்ற சமூகம்  ஊனமுற்ற சமூகமாக மாறி விடும். வாசிப்பில்லையேல் சமூகத்தில் உயிப்பினை தரிசிக்க முடியாது. புத்தகங்களுடன் உறவாடுபவர்கள் தம்மை புடம் போட்டு கொள்கின்றார்கள். மனிதர்களினை அறிந்து கொள்கின்றார்கள். அவர்களால் எதையும் எளிமையாகவும், நிதானமாகவும் அனுக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.
ஒரு தலை முறை வாசிப்பின் நுகாச்சியற்று போய் அடுத்த தலைமுறையினையும் நல்வழிப்படுத்த முடியாமல் அல்லல் உறுகின்றது எனும் கூற்றினை தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. ஆயினும் அத்தகையவர்களில் பிடியில் இருந்து இளையதலைமுறையினை  குறிப்பாக இளம் பராயத்தினராகிய சிறுவர்கள் சரியான பாதையில் நடை பயில்வதற்கு வழிப்படுத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு புத்திஜீவிகளினது கைகளில் உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
தாம் வாசிக்காது விட்டாலும் இளம் தலைமுறையினரை வாசிப்பின் செயல் தளத்தில் இயங்க அனுமதியாதவர்கள் கூட சமூகத்தில் விரவிக் காணப்படுவதுடன் வெறுமனே பரீட்சை மையக்கல்வியின் பால் பற்றுதி கொண்டு செயல்படுகின்றவர்களினையும் சமகாலத்தில் தரிசிக்கவேண்டிய அவலம் உண்டு. ஆயினும் இவற்றின் மத்தியில் இருந்து சவால்களிற்கு முகம் கொடுத்து வாசிப்பின் மகத்துவத்தினை இளம் தலை முறையினர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
இன்றைய பொழுதுகளில் வாசிப்ப அற்று போவதினால் மாணவர்கள் தொழில் வாய்ப்புக்களினை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெறுகின்ற போட்டி பரீட்சைகள் போன்ற வற்றில் சித்திபெற தவறுகின்றமையும் அதனால் அவர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுகொள் முடியாமல் இருப்பதும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது.
வாசிப்பின் ஊடாகவே மொழித்தேர்ச்சியென்பது சாத்தியமாகும் தேர்ந்த வாசிப்பின்மையினால் மொழித்தேர்ச்சியில் தோற்றுப்போகின்ற இளம் தலைமுiயினரை அவர்களது கல்விப்  பெறுபேறுகளின் ஊடாக கண்டு கொள்ள முடிகின்றது.
  வாசிப்பதன் ஊடாகவே மனிதன் பூரணமடைகின்றான். வாசிப்பின் ஊடாகவே அறிவார்ந்த சமூகத்தினை கட்டியெழுப்பமுடியும். உண்மையான வாசிப்பின் ஊடாகவே அறிவுசார் உலகினை அறிந்து கொள்ளமுடிகின்றது. இத்தகைய சிறப்பும் அவசியமும் வாய்ந்த  புத்தக வாசிப்புப் பண்பாடு மேலோங்கிட உலக புத்தகதினத்தினை நாம் அனைவரும் கொண்டாடுதல் சிறப்பிற்குரியதாகும்.

எம்முடைய வாழ்வியல் நிகழ்வில் பிறந்தநாள் பரிசாகவும்  திருமணநாள் அடையாளமாகவும்  குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும்  நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களை அன்பளிப்பதன் ஊடாக அறிவால் உயர்ந்த சமூதாயத்தினை எம்மால் வளர்த்தெடுக்கமுடியும் இதனுடாக வாசிப்பின் அவசியத்தினையும் எம்மவர்க்கு உணர்த்திக்கொள்ள முடியும் எனவே அறிவு நிறைந்த சமூகத்தின் உருவாக்கத்தினை கருத்தில் கொண்டு உலக புத்தக தினத்தினை நாம் அனைவரும் கொண்டாடுவதன் ஊடாக அறிவால் உயர்ந்த பூரணத்துவமான சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்.

 நன்றி யாழ்.தினக்குரல் 23.04.2014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக