என்னைப் பற்றி

ஞாயிறு, அக்டோபர் 30, 2022

காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்கள்.

(எஸ்.ரி.அருள்குமரன்) காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்களை நினைத்துப்பார்க்கின்றபோது ஏற்படுகின்ற மனமகிழ்விற்கு ஈடாக வாழ்வியலில் ஏதுமில்லை. கலை அனுபவம் கனதியானது. அதில் ஈடுபட்டதினால் கற்றுக்கொண்டவை ஏராளம். பெற்றுக்கொண்ட உறவுகள் பெறுமதியானவை. சேமித்தசொத்துக்கள் அப்படைப்புக்களின் பின்னரான மனநிம்மதி. இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம் கலைப்பயணங்களின் அனுபவங்கள். நாம் எங்கிருக்கவேண்டும் என்பதையும் ,எதில் இயங்கவேண்டும் என்பதையும் காலம் நிர்ணயிக்கின்றது. நினைத்துப்பார்க்கின்ற போது நாம் இவ்வாறெல்லாம் செயற்பட்டோமா என்கின்ற பிரமிப்பினை ஏற்படுத்துகின்றன சில நிகழ்வுகள். அத்தகைய செயற்பாட்டு தளமாக அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டத்துடனான உறவினைப்பும், அங்கே செயற்படுத்திய கலைச்செயற்பாடுகளும் மனத்திரையி்ல் விரிகின்றன. போருக்கு பின்னரான பொழுதுகளில் இராப்பொழுதுகளை பயனுள்ளதாகசெயற்படுத்தவேண்டும் என பலரும் சிந்தித்துக்கொண்டிருந்த தருணங்களில் செயல் முனைப்புள்ள வகையில் இயங்கியலுக்கு முதன்மை கொடுக்கின்றதாக அளவெட்டி மகாஐனசபை கலைஞர் வட்டத்தினர் செயற்பட்டனர். ஊர் கூடுவதற்கும், கூடிக்கதையாடுவதற்குமான பொழுதுகளாக கலைச்செயற்பாடுகள் தகவமைக்கப்பட்டன. அப்பொழுதுகளை மிகப்பெறுமதியானதாக்கி, மூத்த படைப்பாளிகளிற்கான அடையாளமாகவும், இளைய படைப்பாளிகளிற்கான வாய்ப்பாகவும் ஊர் வரலாற்றினை ஆவணப்படுத்துகின்றதாகவும்  செயற்பாடுகள் விரிந்தன. இவ் விரிதளத்தினுள் சிறிய புள்ளியாக நாமும்  பயணித்தமை பாக்கியமே. மகிழ்வான மாலைப்பொழுதுகள் எனும் தொனிப்பொருளில் பௌர்னமி தினங்களில் முத்தமிழிற்கு முதன்மை கொடுத்து  நாடகம்,வில்லிசை,கவியரங்கம்,       விவாதம், நடனம் ,இசை நிகழ்ச்சி,பாடல் என பல நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபற்றுனர்களாகவும், பார்வையாளர்களாகவும் செயற்பட்டனர். இது ஒரு வித்தியானமான பொறிமுறையாக இருந்தது. இத்தளம் பலருக்கு அடையாளத்தினை பெற்றுக்கொடுத்ததுடன், தமது திறன்களை வெளிப்படுத்தி கற்றுக்கொள்வதற்கான களங்களை திறந்து விட்டிருந்தன. கலைஞர்களது உருவாக்கத்திற்கு   களங்களும் தளங்களும் அவசியம் என்பர்.  அந்த வகையில் பலரது வளர்ச்சிக்கான களங்களை  ஏற்படுத்தியிருந்தன. எமது இயங்கியல் பரிமானத்தில் அளவெட்டி மகாஜனசபை கலைஞர் வட்டத்தினது வாய்பளிப்பு ஆதாரமானது.மகாஐனசபை கலைஞர் வட்டத்துடன் இனைந்து இயங்கு வதற்கான வாய்ப்பு பல்கலைக்கழகம் பெற்றுத்தந்த மிக உன்னதமான நட்பர் சர்வேஸ் மூலம்  சாத்தியமானது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாது இயங்குகின்ற ஆளுமையாளர் இவர். இவரதுகோரிக்கைக்கமைவாக நாடகம் பழக்குவதற்கான இணைவின் மூலம் மகஜனசபை சபை கலைஞர் வட்டத்துடணான பயண உறவாரம்பித்தது. நல்லூர் திருவிழாவில் கண்டபோது நிலாக்கால கலை நிகழ்வு நிகழ்த்தப்போவதாகவும் அந்நிகழ்வில் இனணந்துசெயற்படுமாறும் சர்வேஸ் அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பினூடே சாட்சி எனும் நகைச்சுவை நாடகம் பழக்க சென்று  பல நல்ல உறவுகளை  பெற்றுக்கொண்டேன். "சாட்சி" எனும் நகைச்சுவை நாடகமானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்   பரீட்சைக்காக மேடையிடப்பட்டது. அந்நாடகத்தை பார்வையிட்டு நல்ல கருத்துக்களை பகிர்ந்திருந்தார்சர்வேஸ். அவ் நாடகத்தை மேடையிடுவோம் என கேட்டுக்கொண்டார். இவர்இத்தகைய செயற்பாடுகளின் மூலம் பல நிலைகளில் உள்ளவர்களை இணைத்திருந்தமை சிறப்பான விடயமாக இருந்தது. இந்நாடகத்தை பழக்கியபோது விஜயபாஸ்கரன் சேர் சில ஆலோசனைகள் குறிப்பிட்டு வழிகாட்டியிருந்தார். நூலகர் க.சௌந்தரராஐன் ஜயா வினது வேண்டுகோளிற்கு ஏற்ப "செவிட்டு ராமு "எனும் நகைச்சுவை நாடகத்தில் நடிகனாக பங்குபற்றியிருந்தேன். இந்நாடகத்தில் சகோதரர் குமரன் சௌந்தரராஜன் ஐயா, ஆகியோர் ஆற்றுகையாளராக செயற்பட்டிருந்தோம். அதேபோன்று ஐயாவின் வழிகாட்டலில் "வைத்தியருக்கு வைத்தியம்" எனும் நகைச்சுவை  நாடகத்தில் மேற்படி நாடகத்தில் பங்கு பற்றியவர்களுடன் துவாரகன் இணைந்து கொண்டு பெண்பாத்திரத்தினை ஏற்று சிறந்த முறையில் அளிக்கை செய்திருந்தார். இங்கு நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் நிகழ்தப்பட்டது. நகைச்சுவை நாடகங்களது  நிகழ்த்துகைக்கான காரனமாக இறுகிப்போயுள்ள மக்களிடையே சிரிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது மனங்களில் மகிழ்வினை ஏற்படுத்த முடிவதுடன் அவர்களிடையே மாற்றத்தினை கொண்டு வர முடியும் என்பதினால் அத்தகைய அளிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து அளிக்கை செய்யப்பட்டன. அத்தகைய அளிக்கைகளுக்கு பார்ப்போரிடம்  வரவேற்பு கிடைக்கப்பபெற்றதை அவர்களிடம் இருந்து கிடைத்த எதிர் வினையின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது. "மாயவலை "எனும் குறியீட்டு நாடகம் எனது நெறியாழ்கையில் மகிழ்வான மாலைப்பொழுதொன்றில் நிகழ்த்தப்பட்டது. குறியீட்டின் ஊடாக  பல விடயங்களை அந் நாடகம் வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறு அங்கு நிகழ்த்திய கலை அளிக்கையின் நினைவுகள் விரிகின்றன. இப்பதிவு அங்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளில்  ஒரு சிறு பகுதி மட்டுமேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக